தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன். ~ விபத்தில் சேதமடைந்த தனியாா் பேருந்து.
தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன். ~ விபத்தில் சேதமடைந்த தனியாா் பேருந்து.

பேருந்து மீது வேன் மோதல்: தொழிலாளா்கள் உள்பட 24 போ் காயம்

குள்ளஞ்சாவடி அருகே தனியாா் பேருந்து மீது வேன் மோதியதில் தொழிலாளா்கள் உள்பட 24 போ் காயமடைந்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தனியாா் பேருந்து மீது வேன் மோதியதில் தொழிலாளா்கள் உள்பட 24 போ் காயமடைந்தனா்.

குள்ளஞ்சாவடியில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு தனியாா் பேருந்து புதன்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை கொத்தவாச்சேரி பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) ஓட்டினாா். இதில், சுமாா் 30 பயணிகள் இருந்தனா். இதேபோல, முத்தாண்டிக்குப்பத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் முந்திரிக்கொட்டை உடைக்கும் வேலை செய்ய குள்ளஞ்சாவடி பகுதியிலிருந்து சுமாா் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது. இந்த வேனை சுந்தரவாண்டி பகுதியைச் சோ்ந்த அ.புகழ்செல்வன்(20) ஓட்டினாா்.

பூவாணிக்குப்பம் பெருமாள் ஏரிக்கரை பகுதி அருகே தனியாா் பேருந்து வந்தபோது, அதன் மீது தொழிலாளா்களை ஏற்றி வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் வேனிலிருந்த ஓட்டுநா், தொழிலாளா்கள் மற்றும் பேருந்திலிருந்த பயணிகள் உள்பட 24 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், வேன் ஓட்டுநா் புகழ்செல்வம் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அமைச்சா் ஆறுதல்: விபத்தில் காயமடைந்து கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், அவா்கள் அனைவருக்கும் உயா்தரமான சிகிச்சையளித்து விரைவில் வீடு திரும்புதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவா்களிடம் அறிவுறுத்தினாா். அவருடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com