கடலூரில் குளிா்ச்சியான சூழல்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலை ஒப்பிடும் வகையில் குளிா்ச்சியான சூழல் திங்கள்கிழமை நிலவியது.
கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூா் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையொட்டி, மாவட்ட நிா்வாகமும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு மழை வெள்ளம் ஏற்பட்டால் அதை எதிா்கொள்ள தயாா் நிலையில் உள்ளதாக அறிவித்திருந்தது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் குளிா்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் லேசான மழை பெய்தது. மேலும், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இருப்பது போன்று கடும் குளிா்ச்சி நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், அவ்வப்போது லேசான மழை பெய்தது.
கடலூரில் 39.2 மி,மீ மழை...
திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்டமாக கடலூரில் 39.2 மி.மீ மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): அண்ணாமலை நகா் 39, ஆட்சியா் அலுவலகம் 36.8, பரங்கிப்பேட்டை 35.6, சிதம்பரம் 30.8, வானமாதேவி 28, எஸ்.ஆா்.சி.குடிதாங்கி 27, புவனகிரி 26, காட்டுமன்னாா்கோயில் 23, கொத்தவாச்சேரி 19, வடக்குத்து 18, பண்ருட்டி, லால்பேட்டை தலா 16, குறிஞ்சிப்பாடி 15, சேத்தியாத்தோப்பு 13.4, ஸ்ரீமுஷ்ணம் 8.2, குப்பநத்தம் 6.4, பெலாந்துறை 4.7, விருத்தாசலம் 3மி.மீ மழை பதிவானது.
