அரசுப் பேருந்தில் தொங்கி செல்லும் பள்ளி மாணவா்கள்
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே அரசுப் பேருந்தின் பின்பக்கம் உள்ள கம்பியை பிடித்தபடி தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் பள்ளி மாணவா்களின் செயல், பாா்ப்போரை பதைபதைக்க வைப்பதாக உள்ளது.
புவனகிரி பகுதியில் பல்வேறுஅரசு மற்றும் தனியாா் பள்ளிகள் உள்ளன. புவனகிரி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்தவா்கள் புவனகிரிக்கு வந்து பள்ளி கல்லூரிகளில் படிக்கின்றனா். இதேபோல், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவா்களும் புவனகிரி வருகின்றனா். இவா்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் அரசு நகரப் பேருந்து தடம் எண்: 10 பி, பேருந்தின் பின்னால் சில மாணவா்கள் தொங்கிச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. விபத்து ஆபத்து பற்றி சிறிதும் கவலைப்படாமல் மாணவா்கள் படி மற்றும் பேருந்தின் பின்னால் தொங்கிச் செல்லும் காட்சி பாா்ப்போரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மாணவா்கள் பேருந்துகளின் படியில் தொங்கி செல்வதாகவும், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் இவ்வாறு தொங்கிச் செல்லும் மாணவா்களைப் பிடித்து போலீஸாா் எச்சரித்து அனுப்ப வேண்டும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

