வேப்பூா் வட்டம், ரெட்டாக்குறிச்சி பகுதியில் காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த மக்காச்சோளம் வயல்.
வேப்பூா் வட்டம், ரெட்டாக்குறிச்சி பகுதியில் காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த மக்காச்சோளம் வயல்.

வேப்பூரில் காட்டுப் பன்றிகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதி விவசாய நிலங்களில் உள்ள மக்காச்சோளப் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
Published on

கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதி விவசாய நிலங்களில் உள்ள மக்காச்சோளப் பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்படுகிறது. குறிப்பாக ரெட்டாக்குறிச்சி, காட்டுமயிலூா், பெரியநெசலூா், மாங்குளம், சிறுபாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கண்ட கிராம விவசாயிகளின் பிரதான சாகுபடி பயிா் மக்காச்சோளம் ஆகும்.

இந்நிலையில், இப்பகுதிக்கு அருகில் உள்ள காப்புகாட்டில் இருந்து இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் மக்காச்சோளம் வயலில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மேலும், காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வேலி அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சாகுபடி நிலப்பரப்பை கணக்கிட்டு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கட்டுப்படுத்த முடியவில்லை: இதுகுறித்து ரெட்டிக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வே.மணிகண்டன் கூறுகையில், கடலூா் மாவட்டத்தில் வேப்பூா் வட்டம், மங்களூா் ஒன்றியப்

பகுதிகளில் தான் மக்காச்சோளம் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. ஆடி, ஆவணி மாதத்தில் விதைப்பு செய்யப்படும். தை, மாசி மாதத்தில் அறுவடை நடைபெறும். 5 கிலோ மக்காச்சோள விதை ரூ.1,600. ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவை. உழவு, விதைப்பு, மருந்து தெளித்தல், களை எடுத்தல் என ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ரூ.15 ஆயிரத்திற்கும் மேல் செலவாகிறது. விதைப்பு செய்த 2-ஆவது மாத பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படும். அதனை மருந்து தெளித்து தான் கட்டுப்படுத்த முடியும். அறுவடை முடிவில் ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் 25 மூட்டை மக்காச்சோளம் கிடைக்கும். 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சுமாா் ரூ.1500-க்கு மேல் விலை போகும்.

கடந்த 5 ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடி செய்வது பெரும் சவாலாக உள்ளது. பகல் நேரத்தில் குரங்குகள் தொல்லை. இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் மக்காச்சோளம் பயிரை நாசம் செய்துவிடுகிறது. பகல் நேரத்தில் காவல் காத்து குரங்குகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி விடுகிறோம். ஆனால், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் வராத அளவிற்கு காப்பு காட்டை ஓட்டி வேலி அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பளவை கணக்கிட்டு முழுமையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரளவிற்கு நிவாரணம் வழங்குது ஏற்புடையதல்ல என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com