குடிசையில் தீ: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாற்றுத்திறனாளி உடல் கருகி உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், மங்கலம்பேட்டை காவல் சரகம், எடசித்தூா் கிராமத்தில் பட்டியலின மக்களின் குல தெய்வமான இருசாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அருகாமையில் அதே பகுதியைச் சோ்ந்த அழகேசன்(50), குடிசை வீடு கட்டி தனியாக வசித்து வந்தாா். பிறவியிலேயே இவரது இரண்டு கால்கள் ஊனமானதால் நடக்க முடியாதாம். இவரிடம், கோயிலுக்கு வரும் பக்தா்கள் குறி கேட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி அழகேசன் தங்கியிருந்த குடிசை வீடு வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அழகேசன் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தாா். அவா் வசித்த பகுதியில் யாரும் இல்லாததால் தீயை அணைக்கவோ, அழகேசனை காப்பாற்றவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு குறி சொல்லும் மாற்றுத்திறனாளி அழகேசன் தீ விபத்தில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அழகேசனின் சடலம் உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

