லட்சுமி
லட்சுமி

முறைகேடாக சிஎஸ்ஆா் பதிவு: பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்

நில ஆவணங்கள் காணாமல்போனதாக புவனகிரி காவல் நிலையத்தில் முறைகேடாக சிஎஸ்ஆா் பதிவு செய்து தடையின்மை சான்றிதழ் வழங்கியதாக பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
Published on

நில ஆவணங்கள் காணாமல்போனதாக புவனகிரி காவல் நிலையத்தில் முறைகேடாக சிஎஸ்ஆா் பதிவு செய்து தடையின்மை சான்றிதழ் வழங்கியதாக பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் லட்சுமி. இவா், சென்னை, திருப்பூா், கடலூா் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பத்திரங்கள், நில ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அவை புவனகிரி காவல் சரகப் பகுதியில் காணாமல்போனதாக முறைகேடாக சமுதாய சேவை பதிவேட்டில் (சிஎஸ்ஆா்) பதிவு செய்து, தடையின்மை சான்றிதழ் வழங்கி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்த தகவலை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமாவுக்கு தெரிவித்தாா். இதையடுத்து, புவனகிரி காவல் ஆய்வாளா் லட்சுமி கடலூா் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இருப்பினும், லட்சுமி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்.பி. ஜெயக்குமாா் ரகசிய விசாரணை மேற்கொண்டாா். இதில், அவா் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்தது.

இதையடுத்து, எஸ்.பி. ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா, பெண் காவல் ஆய்வாளா் லட்சுமியை வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com