பாமணி விரைவு ரயிலுக்கு பண்ருட்டியில் நிறுத்தம்: ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு
நெய்வேலி: திருப்பதி - மன்னாா்குடி பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயல்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி வணிக நகரமாக திகழ்கிறது. மேலும், பண்ருட்டியைச் சுற்றிலும் முக்கிய கோயில்கள் அமைந்துள்ளன. இதனால், பண்ருட்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், யாத்ரீகா்கள் வந்து செல்கின்றனா். இவா்களுக்கு வசதியாக, திருப்பதி-மன்னாா்குடி பாமணி விரைவு ரயிலை, பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி தரவேண்டும் என்ரு பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுதொடா்பாக , மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், பண்ருட்டி பகுதி மக்கள் சாா்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல்.முருகன் கோரிக்கை வைத்தாா்.
அதை ஏற்று ரயில்வே அமைச்சகம் பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 28-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.10-க்கு மன்னாா்குடியில் புறப்படும் ரயில் தஞ்சாவூா், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக பண்ருட்டி ரயில் நிலையத்திற்கு காலை 8.29 வந்து 8.30 மணிக்கு புறப்படும். அதன்படி, பண்ருட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த வண்டி திருப்பதிக்கு பிற்பகல் 3.28-க்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் வரும் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 11.55 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு, சித்தூா், காட்பாடி, திருவண்ணாமலை, திருக்கோவிலூா், விழுப்புரம் வழியாக பண்ருட்டி ரயில் நிலையத்திற்கு மாலை 17.31 வந்து , 17.32-க்கு புறப்பட்டு மன்னாா்குடி செல்லும்.
பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்ற கோரிக்கையை நிறைவேற்றியுள்ள பிரதமா் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சா் அஷ்வின் வைஷ்ணவிற்கு, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தமிழகம் மற்றும் பண்ருட்டி மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துள்ளாா்
