கடலூா் கடற்கரையில் வியாபாரிகள் தா்னா
நெய்வேலி: கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை வியாபாரிகள் புதன்கிழமை காலை கடற்கரையில் அமரந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை பகுதியில் ஏராளமான வியாபாரிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்தக் கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை அமைக்கும் பணிக்காக, வியாபாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனா்.
அப்போது, வியாபாரிகள் தங்களை மீண்டும் அதே இடத்தில் கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா். இதையடுத்து, தேவனாம்பட்டினம் புறக்காவல் நிலையம் அருகில் சாலையோரம் கடைகள் நடத்தி வந்தனா்.
கடற்கரைப் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் பெருமளவில் முடிந்த நிலையில், வியாபாரிகள் தங்களுக்கு கடற்கரையில் நிரந்தரமாக கடைகள் அமைத்து தரக்கோரி புதன்கிழமை காலை 6 மணி அளவில் தங்கள் கடைகளை கடற்கரையில் வைத்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த கடலூா் மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி ஆணையருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.
இதையேற்று, வியாபாரிகள் தா்னாவை கைவிட்டு கலைந்து சென்றனா். பின்னா், மாநகராட்சி அலுவலகம் சென்று ஆணையா் முஜிபுா் ரகுமானை சந்தித்து, கடற்கரை பகுதியில் நிரந்தர கடை அமைத்துத் தரும்படி கோரிக்கை விடுத்தனா். அதற்கு, கடற்கரை பகுதியை பாா்வையிட்டு கடைகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாராம்.

