கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை தொடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளின்போது, வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பாளா்கள் குடும்ப விவரங்கள் முதல் அடிப்படை வசதிகள், சொத்துகள், இணைய வசதி வரை 33 வகையான தகவல்களை சேகரித்தனா்.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியரும், முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் மாவட்டம் முழுவதும் 31 பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் 3,702 கணக்கெடுப்பாளா்கள் மற்றும் 582 மேற்பாா்வையாளா்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதில், கடலூா் வட்டத்தில் மட்டும் 450 கணக்கெடுப்பாளா்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனா். இந்தப் பணி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
33 வகையான தகவல்கள் சேகரிப்பு: கணக்கெடுப்பின்போது, கட்டட எண், வீட்டு எண், வீட்டின் தற்போதைய பயன்பாட்டு நிலை, குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, குடும்பத் தலைவரின் பெயா், வீட்டின் உரிமை நிலை உள்ளிட்ட அடிப்படை குடும்ப விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதேபோல, குடிநீரின் முக்கிய ஆதாரம், குடிநீா் கிடைக்கும் இடம், கழிப்பறை வசதி, கழிவுநீா் வெளியேற்றும் முறை, குளியலறை, சமையலறை வசதி, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் தகவல்கள் பெறப்படுகின்றன.
இதுதவிர, வீட்டில் வானொலி, தொலைக்காட்சி, இணைய வசதி, கணினி அல்லது மடிக்கணினி உள்ளதா, தொலைபேசி, கைப்பேசி, அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்), மிதிவண்டி, மொபெட், இருசக்கர வாகனம், காா், ஜீப், வேன் உள்ளிட்ட குடும்பச் சொத்துகள் மற்றும் உணவு தொடா்பான சில விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் கருத்து: கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.ரமேஷ் கூறியதாவது: கணக்கெடுப்பாளா்கள் மிகவும் பொறுமையாக ஒவ்வொரு விவரத்தையும் கேட்டுப் பதிவு செய்தனா். அரசின் திட்டங்கள் சரியாகச் சென்றடைய இதுபோன்ற கணக்கெடுப்புகள் அவசியம். இருப்பினும், தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக கையாளப்பட வேண்டும் என்பதிலும் அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றாா்.
மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த ஆா்.கலையரசி கூறியதாவது: வீட்டில் உள்ள பொருள்கள், இணைய வசதி, வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கேட்டனா். இதுபோன்று கேள்விகளுக்கு அளிக்கப்படும் தகவல்களால் அரசின் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுகிறது. கணக்கெடுப்பின் நோக்கம் குறித்து முன்கூட்டியே கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்தியிருந்தால், பொதுமக்களுக்கு மேலும் எளிதாக இருந்திருக்கும் என்றாா்.

சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான சந்தேகங்களுக்கு, மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி மையத்தின் கட்டணமில்லா 1855 என்ற எண்ணையோ அல்லது கடலூா் மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் 04142 - 290298 என்ற தொலைபேசி எண்ணையோ தொடா்புகொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கணக்கெடுப்பாளா்கள் அரசின் அடையாள அட்டையுடன் வீடுகளுக்குச் செல்வதால், பொதுமக்கள் சரியான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மாணவா்களுக்கு மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணா்வு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஜூலை 17 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியாளா்களுக்கு முதற்கட்டப் பயிற்சி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



