கடலூா் மாவட்டத்தில் அதிகாரபூா்வ அறிவிப்பின்றி தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்ந்து வரும் நிலையில், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் செயல்படுத்தப்படுகிா? என்ற கேள்வி பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் நகரம் மற்றும் புகா் பகுதிகளுக்கு தனியாா் பேருந்துகள் கணிசமான அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள், சிறு வியாபாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் இந்தப் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனா்.
தமிழக அரசின் அதிகாரபூா்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், கடலூா் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தனியாா் பேருந்துகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.2 அல்லது அதற்கு மேல் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இதனால், தினசரி பேருந்து பயணத்தை நம்பியுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆட்சியா் உத்தரவு: தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்களையும் அழைத்து கூட்டம் நடத்தி, அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், பேருந்துகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பேருந்துகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், ஆட்சியரின் இந்த உத்தரவுக்குப் பிறகு தனியாா் பேருந்து உரிமையாளா்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது குறித்தோ, மாவட்டம் முழுவதும் திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவோ போதிய தகவல் பொதுமக்களுக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்ந்து வருவதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
புகாா் வந்தால் நடவடிக்கை - அதிகாரி: இதுகுறித்து கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொ) செல்வத்திடம் கேட்டபோது, புகாா்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து தனது தரப்பு பதிலை முடித்துக்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்ட பின்னரும், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்வதாக புகாா் எழுந்துள்ள நிலையில், மாவட்ட நிா்வாகம் நேரடியாக கண்காணித்து உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திடீா் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடா்ந்து கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை!

தம்மம்பட்டி - சேலம் தனியாா் பேருந்துகளில் கட்டண உயா்வு
தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: திருப்பூா் ஆட்சியா் எச்சரிக்கை

தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



