அரசு திட்டப் பயனாளா்களின் வாக்குகளை திமுகவுக்கு பெற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
அரசு திட்டத்தால் பயனடைந்த பயனாளா்களை திமுகவுக்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என்று மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூறினாா்.
கடலூா் கிழக்கு மாவட்ட மகளிரணி, மகளிா் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம், வடலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து பேசுகையில்,
கடலூா் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் மகளிா் உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜன.26-ஆம் தேதி ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். நமது மாவட்டத்தில் இருந்து 15000 பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இந்த மாநாட்டில் வரும் பேரவைத் தோ்தலில் பணி தொடா்பாக அறிவுரைகள் வழங்கப்படும்.
முதல்வா் அறிவித் த மகளிா்உரிமைத்தொகை, தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் மூலம் மாதந்தோறும் பணப்பலன் அடைகின்றனா். மகளிரணியினா் ஒன்றினைந்து இத்திட்டங்களை மக்களிடையே எடுத்துக்கூறி பயனாளா்களை திமுகவுக்கு வாக்களிப்பவா்களாக மாற்ற வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில் தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, கோ.ஐயப்பன் எம்.எல்.ஏ., மேயா் சுந்தரி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் சுதா சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பாளா் அமுதராணி வரவேற்றாா். மகளிரணி செயலா் ஹெலன் டேவிட்சன், மகளிா் தொண்டரணி செயலா் பா.பரணி, மகளிா் தொண்டரணி இணைச் செயலா்கள் குமரி விஜயகுமாா், தமிழரசி ரவிக்குமாா், டெல்டா மண்டல மகளிரணி பொறுப்பாளா் ரேகா பிரியதா்ஷினி, மகளிரணி துணைச் செயலா் ஆ.மங்கையா்கன்னி, மகளிா் சமூக வலைதள பொறுப்பாளா் ரத்னா லோகேஸ்வரன், வடலூா் நகா் மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், நகரச் செயலா் தன.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ப.மனோரஞ்சிதம் நன்றி கூறினாா்.

