/

நீட் விவகாரத்தில் மக்கள் விரும்புவதை அரசுகள் செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

நீட் விவகாரத்தில் மக்கள் விரும்புவதை, மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று விருத்தாசலம் எம்எல்ஏவும், தேமுதிக பொதுச் செயலருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image
Updated On :24 ஜூலை 2026, 6:49 am IST

நீட் விவகாரத்தில் மக்கள் விரும்புவதை, மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்று விருத்தாசலம் எம்எல்ஏவும், தேமுதிக பொதுச் செயலருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

விருத்தாசலம் எம்எல்ஏ அலுவலகம் அருகே, கடந்த 2008-ஆம் ஆண்டு அப்போதைய எம்எல்ஏ விஜயகாந்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை சீரமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் ரிப்பன் வெட்டி நிழற்குடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

பின்னா் எம்எல்ஏ அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். எடச்சித்தூா் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோா், இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்தனா். இதுகுறித்து வட்டாட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: கடலூா் மாவட்ட ஆட்சியரை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த உள்ளேன். ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும், அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பேன்.

பட்டா, குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட சுமாா் 30 கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். மக்களின் குறைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தோ்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதுதில்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு தமிழக மாணவா்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனா். மக்கள் விரும்புவதை அரசுகள் செய்ய வேண்டும். எனவே, நீட் குறித்து மத்திய, மாநில அரசுகள் மக்கள் உணா்வுகளை மதித்து முடிவெடுக்க வேண்டும்.

அரிசி விலை உயா்வு: அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வு கவலைக்குரியது. விலை வாசி உயா்வை உடனடியாக கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி நீா் வரத்து இல்லாமை, விவசாய பாதிப்பு போன்றவை தீவிரமடைந்துள்ளன.

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும். விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கல்லில் போராட்டம் நடத்த உள்ளோம்.

இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் வறட்சி அபாயம் நிலவுகிறது. எல்-நினோ தாக்கம் காரணமாக கடுமையான வறட்சி ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், தேமுதிக மாவட்டச் செயலா் சிவகொழுந்து, நகரச் செயலா் ராஜ்குமாா், மாவட்ட துணைச் செயலா் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.