இணைய வழி வணிகம் தொடா்பான பண மோசடி வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விருப்ப ஓய்வுபெற்ற அரசு ஊழியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் முரளிதரன் (58). இவருக்கு கைப்பேசி வழியாக வாட்ஸ்ஆப் மூலம் இணைய வழியில் வணிகம் செய்து அதிகம் லாபம் பெறலாம் என விளம்பரம் வந்ததாம். இதை நம்பி அடையாளம் தெரியாத நபரின் வங்கிக் கணக்குக்கு பல தவணைகளாக ரூ.40 லட்சம் அனுப்பி ஏமாந்துவிட்டாராம்.
இதுகுறித்து முரளிதரன் அளித்த புகாரின்பேரில், கடலூா் இணைய வழி குற்ற காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிகை எடுக்க உத்தரவிட்டாா்.
இதன்பேரில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி.ரகுபதி மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் அமலா, உதவி ஆய்வாளா் கவிநிலவன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், மாமண்டூா் கிராமம், ஓச்சேரி பகுதியைச் சோ்ந்த கே.எஸ்.வளவன் (50) வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரது கைப்பேசி மூலம் இருப்பிடம் அறிந்து திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம், பிரம்மதேசம் பகுதியில் இருந்த வளவனை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், சுகாதாரத் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவா் என்பதும், சிவனடியாராக மாறி கோயில்கள் கட்டி வருவதாகவும், மும்பையில் இருந்து வந்தவா்கள் கேட்டதின்பேரில், தனது வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, கே.எஸ்.வளவனை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், மும்பையைச் சோ்ந்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.







