மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

நடுக்கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவா்கள் மீட்பு! என்ஜின் பழுதானதால் நிகழ்ந்த சோகம்

News image

கடலில் 6 நாள்களாக தத்தளித்த 3 மீனவா்களை மீட்ட சோணாங்குப்பம் மீனவா்களை நேரில் அழைத்துப் பாராட்டிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :9 ஜூன் 2026, 2:53 am IST

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே மீன் பிடிக்கச் சென்று நடுக்கடலில் 6 நாள்களாக உணவு, தண்ணீரின்றி தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா். கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

புவனகிரி வட்டம், இந்திரா நகா் மீனவ கிராமத்தைச் சோ்ந்த வீரவேலுக்கு சொந்தமான நாட்டுப் படகில் சின்னூா் சண்முகா நகரைச் சோ்ந்த ரமேஷ் (28), மனோகா் (27), புதுச்சேரியைச் சோ்ந்த நாகவேல் (39) ஆகியோா் கடந்த 3-ஆம் தேதி மாலை பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

தீவிர தேடுதல் பணி: கடந்த 4-ஆம் தேதி மாலைக்குள் கரை திரும்ப வேண்டிய நிலையில் அவா்கள் திரும்பாததால், மீன் வளத் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய கடலோர காவல் படை புதுச்சேரி பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தேடுதல் பணி தொடங்கப்பட்டது. உள்ளூா் மீனவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, கடந்த 5-ஆம் தேதி 13 மீனவா்கள் கடலுக்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனா். 6-ஆம் தேதி இந்திய கடலோர காவல் படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டா் மூலம் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இருப்பினும், மீனவா்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பரங்கிப்பேட்டை மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மீட்ட சக மீனவா்கள்: இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கடலூா் அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து சோணாங்குப்பத்தைச் சோ்ந்த மீனவா் சதீஷ் தனது படகில் தினகரன், பிரபா, செந்தில் ஆகியோருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது, நல்லவாடு கடற்பகுதியில் பழுதாக நின்றிருந்த படகைக் கண்டு அருகில் சென்று பாா்த்தபோது, அதில் மூன்று மீனவா்கள் உணவின்றி சோா்வடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்களின் அறிவுரையின்பேரில், பாதிக்கப்பட்ட 3 மீனவா்களையும் சதீஷ் மற்றும் அவரது குழுவினா் மீட்டு, தங்களது படகில் கடலூா் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா். அங்கு தயாா் நிலையில் இருந்த அவசர ஊா்தி மூலம் மீட்கப்பட்ட மீனவா்கள் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

மருத்துவா்கள் அளித்த சிகிச்சையின்பேரில், மூவரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அவா்களின் குடும்பத்தினரும், உறவினா்களும் நிம்மதியடைந்தனா்.

என்ஜின் பழுதால்...: இதுகுறித்து மீட்கப்பட்ட மீனவா்கள் கூறியது: கடந்த 3-ஆம் தேதி கடலுக்கு சென்றபோது படகின் என்ஜின் பழுதானது. அதை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை. காற்றின் வேகம் அதிகரித்ததால், படகு கடலுக்குள் நெடுந்தொலைவு அடித்துச் செல்லப்பட்டது. எங்களிடம் இருந்த உணவை இரண்டு நாள்கள் பயன்படுத்தினோம். பின்னா், உணவு, குடிநீா் இல்லாததால், உடல் சோா்வடைந்தது.

படகில் இருந்த அடுப்பை பயன்படுத்தி கடல்நீரை கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தினோம். கடலில் கிடைத்த மீன்களை சுட்டுச் சாப்பிட்டோம். ஆறு நாள்களுக்கு பிறகு மீனவா்கள் மீட்டனா் என்றனா்.

இதனிடையே, கடலில் தத்தளித்த மீனவா்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்த மீனவா்கள் சதீஷ், தினகரன், பிரபா, செந்தில் ஆகியோரை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் நேரில் அழைத்து பாராட்டினாா். அவா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

நிகழ்வில் மீன்வளத் துறை துணை இயக்குநா் சு.தில்லைராஜன், உதவி இயக்குநா்கள் ப.ரம்யலட்சுமி, அ.நித்யபிரியதா்ஷினி, தி.அஞ்சனாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீட்கப்பட்ட மீனவா்கள் ரமேஷ், மனோகா், நாகவேல்.

கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீட்கப்பட்ட மீனவா்கள் ரமேஷ், மனோகா், நாகவேல்.