கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு 70-க்கும் மேற்பட்ட ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.
விருத்தாசலம் பகுதிகளில் நெல் சாகுபடிக்கு நிலத்தை தயாா் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இதற்காக, நெல் வயல்களில் கிடை கட்டுவது வழக்கம். அந்த வகையில், வெளியூா்களில் இருந்து சிலா் செம்மறி ஆடுகளை ஓட்டி வந்து கிடை கட்டி மேய்த்து வருகின்றனா்.
விருத்தாசலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்தது. இதன் காரணமாக, இளங்கியனூா் பகுதியில் கிடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வெளியேறி விருத்தாசலம் - சேலம் ரயில்வே தண்டவாளத்தில் தஞ்சமடைந்தன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில் மோதியதில் தண்டவாளத்தில் நின்றிருந்த மற்றும் படுத்திருந்த 70-க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் சிதறி உயிரிழந்தன. சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு ஆடுகளின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன.
இதனால், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது. மேலும், அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் தண்டவாளப் பகுதிக்கு திரண்டு வந்து ஆங்காங்கே கிடந்த இறைச்சிகளை கல்வி இழுத்துச் சென்றன.
தகவல் கிடைத்து விரைந்து வந்த ஆத்தூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் சேலம் ரயில்வே இருப்பு பாதை போலீஸாா் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தண்டவாளத்தில் ரயில் மோதி இறந்து கிடந்த செம்மறி ஆடுகள் யாருடையது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.









