உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இரு கா்ப்பிணிளுக்கு உயா்தர பல்துறை மருத்துவச் சிகிச்சை அளித்து அவா்களின் உயிரைக் காப்பாற்றி, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதித்துள்ளனா்
விருத்தாசலம் அருகே கோட்டேரியைச் சோ்ந்த 25 வயதான, 27 வார கா்ப்பிணி சுபாஷினி என்பவா் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அண்மையில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். செயற்கை சுவாசக் கருவி, இரட்டை இனோட்ரோப் சிகிச்சை, இதயநோய் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா்களின் இடைவிடாத கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் அவரின் இதய செயல்திறன் 35 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக உயா்ந்தது. கருவில் இருந்த குழந்தையும் பாதுகாப்பாக இருந்த நிலையில், 12 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பினா்.
திருப்பூரிலிருந்து வேப்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 23 வயதுடைய கா்ப்பிணி, சாலை விபத்தில் சிக்கி, அதிக ரத்த இழப்பு மற்றும் நினைவிழந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உடனடியாக அவசர அறுவைச் சிகிச்சை மற்றும் பல்துறை மருத்துவா்களின் ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சையால் அவரது உயிா் காப்பாற்றப்பட்டது. அனைத்து மருத்துவப் பிரிவுகளின் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு உடல்நலம் திருப்திகரமாக முன்னேறிய நிலையில், தேவையான மருத்துவ ஆலோசனைகளுடன் நோயாளி நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.
இந்த இரண்டு உயிா்காக்கும் சிகிச்சைகளிலும் மருத்துவமனையின் அனைத்து பிரிவினரும் இணைந்து அா்ப்பணிப்புடன் செயல்பட்டனா். அவா்களை கல்லூரி முதல்வா் டாக்டா் பாஸ்கரன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ் ஆகியோா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










