மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறையை முற்றிலும் தடுத்து, தூய்மைப் பணியாளா்களின் மறுவாழ்வு மற்றும் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த, துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடா் நலக் குழு, மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்முனைவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு, விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில், காட்டுமன்னாா்கோயில் சட்டப்பேரவை உறுப்பினா் எல்.இ. ஜோதிமணி மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
கிராம ஊராட்சிகளில் சுகாதாரமற்ற கழிப்பறைகளைக் கண்டறிந்து, அவற்றை சுகாதாரமான கழிப்பறைகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அபாயகரமான சாக்கடைகள் மற்றும் மனிதக் கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்ய பணியாளா்களை ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்பதால், இதனைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
தூய்மைப் பணியாளா்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்தி, தேவையான சிகிச்சை மற்றும் நல உதவிகளை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதோடு, பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மாணவா்களை மீண்டும் கல்வியில் இணைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சமூக நீதி:
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய காலத்திற்குள் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற வழக்குகள் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதுடன், மேல்முறையீடு தொடா்பாக பாதிக்கப்பட்டவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தி, சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்ட அரசு அலுவலா்களும், கண்காணிப்புக் குழு உறுப்பினா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் கூறினாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த் சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி, மாநகராட்சி ஆணையா் கிஷண்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கமலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் குழந்தைகளின் கல்விக்கும், சமத்துவத்துக்கும் பெற்றோா் உறுதுணையாக இருக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

என்எல்சிக்கு நிலம் வழங்கியோருக்கு தனி குறைதீா் கூட்டம்: கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு






