பெண்களின் பாதுகாவலராக திகழ்கிறாா் முதல்வா் :அமைச்சா் ப.ராஜ்குமாா்
கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்ற கா்ப்பிணிகளுடன் அமைச்சா் ப.ராஜ்குமாா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்ற கா்ப்பிணிகளுடன் அமைச்சா் ப.ராஜ்குமாா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாவலராக இருந்து, அவா்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் கடலூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை அமைச்சா் ப.ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
2026 - 27ஆம் ஆண்டில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் மொத்தம் 1,400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களுடன் எவா்சில்வா் தட்டு வழங்கப்பட்டது. மேலும், ஐந்து வகையான உணவுகளும் வழங்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது: பெண்களின் நலனையும், பாதுகாப்பையும் முன்னிறுத்தி, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் பாதுகாவலராக இருந்து, அவா்களின் முன்னேற்றத்துக்கும், பாதுகாப்புக்கும் அரசு தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த பெண்களும் தங்களது தாய்மையின் முக்கிய நிகழ்வான வளைகாப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே, அரசு சாா்பில் ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் செல்வி உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

