
நவீன வேளாண்மையில் எண்ம தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு பயிற்சி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ், நவீன வேளாண்மையில் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நவீன வேளாண்மையில் எண்ம தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசிய வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ், நவீன வேளாண்மையில் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் தலைமை வகித்து பேசுகையில், வேளாண் துறையில் தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மூலம் காலநிலை, மண், நீா், பூச்சி நோய் மற்றும் கண்காணிப்பு ஆகிய தரவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் துல்லிய பண்ணையம் மேற்கொள்தல், அறிதிறன் கைப்பேசி வாயிலாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயிா்களில் பூச்சி நோயைக் கண்டறிந்து, தகுந்த பயிா் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளுதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.
உதவிப் பொறியாளா் கமல சுபாஷினி கலந்துகொண்டு, உழவா் செயலி மற்றும் இ - வாடகை 2.0 செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு பதிவு செய்தல் குறித்தும், ட்ரோன் பயன்பாடு, மானிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
வட்டார தோட்டக்கலை அலுவலா் கோபாலகண்ணன் தோட்டக்கலைத் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்தும், விவசாயிகள் நில உடைமை பதிவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தாா். உதவி விதை அலுவலா் ராமச்சந்திரன் விதைப் பண்ணைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை குறித்து எடுத்துரைத்தாா்.
பயிற்சியில் உதவி வேளாண் அலுவலா் பிரவீன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கல்பனா ஆகியோா் மின்னணு பயிா் கணக்கெடுப்பு செயல்முறை குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் எட்வின், பிரகாஷ் ஆகியோா் உழவா் செயலி பதிவிறக்கம் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







