கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் நியாயவிலைக் கடை ஊழியா் கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், வாசுதேவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் சரவணன் (41). இவரது மனைவி வித்யா (31). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். சின்னசேலம், செங்குந்தா் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் சரவணன் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் மன உளைச்சலில் தவித்தாராம். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சரவணன் வீட்டில் இருந்தபோது தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.







