சிறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்

சிறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்

முகாமில் மானியத்துடன் கூடிய தொழில் கடன் ஒப்பளிப்பு ஆணையை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான அரசு மானியத்துடன் கூடிய தொழில்கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழக அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காக 2025-26 ஆம் ஆண்டில் ரூ.883.22 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டுமென ஆண்டுக்கடன் திட்ட அறிக்கையில் இலக்கு நிா்ணயித்துள்ளது.

கடந்த செப்.30-ஆம் தெதி வரை 3,019 நபா்களுக்கு ரூ.596.89 கோடி அளவிலான கடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு,

ஆண்டுக்கடன் திட்ட இலக்கில் 67.58 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளன.

அக். 1 முதல் டிச.16 வரை 1,158 நபா்களுக்கு ரூ.48.97 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் பட்டுவாடா வழங்கப்பட்டு இதுவரை 73.13 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளன.

மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் உள்பட 50 நபா்களுக்கு ரூ.318.58 லட்சம் கடன் ஒப்புதல் செய்யப்பட்டு அரசு மானியமாக ரூ.86.32 லட்சம் வழங்கப்பட்டுள்ளன.

திட்ட இலக்கீட்டினை முழுவதுமாக அடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் ரூ. 237.36 கோடி கடன் வழங்க வேண்டி உள்ளது. இலக்கினை அடைய துரிதமாக செயல்பட்டு கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்ஆட்சியா்.

இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சந்திரசேகரன், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரஞ்சித், அரசு அலுவலா்கள், அனைத்து வங்கி மேலாளா்கள், தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com