சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 பேருக்கு ஆயுள் சிறை
கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி தீா்ப்பளித்தாா்.
குடியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் (33) கடந்த 17.2. 2021 அன்று 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதற்கு, அதே கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கன் (48) உடந்தையாக செயல்பட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் போலீஸாா் ரங்கநாதன், பாண்டுரங்கன் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ரங்கநாதனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும், பாண்டுரங்கனுக்கு ஆயுள் சிறை தண்டையும், ரூ.2ஆயிரம் அபராதமும் விதித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்தாா்.

