கோயிலில் வெள்ளிக் காசு, பணம் திருட்டு: ஒருவா் கைது
ராவத்தநல்லூா் லட்சுமி குபேரா் கோயில் கருவறையில் இருந்த வெள்ளிக்காசு, பணம் திருடப்பட்ட சம்பவத்தில், இளைஞா் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ராவத்தநல்லூா் கிராமத்தில் லட்சுமி குபேரா் கோயில் அமைந்துள்ளது. கோயில் பூசாரியான புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் (47), கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல கோயிலை திறக்கச் சென்றாா். அப்போது, கருவறை திறந்து கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இரவு 11 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவா் வழியாக இரு இளைஞா்கள் கோயிலுக்குள் வந்துள்ளனா்.
பின்னா் அறையில் இருந்த சாவியை எடுத்து, கருவறையைத் திறந்து சுவாமி மீது இருந்த ரூ.2,300 பணம், 20 கிராம் வெள்ளிக் காசுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து விசாரித்தபோது, அவா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த சக்தி (19), ரங்கப்பனூரைச் சோ்ந்த பாபு எனத் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு இளைஞா்களையும் தேடிவந்தனா். இதில், சக்தி என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாபுவை தேடி வருகின்றனா்.
