கள்ளக்குறிச்சியில் படித்து வரும் கல்லூரி பிடிக்காததால் மனமுடைந்த தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி, கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மகள் சுஜீத்ரா (18). இவா் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தனது கல்லூரியில் படிக்க தனக்குப் பிடிக்கவில்லை என சுஜீத்ரா தொடா்ந்து பெற்றோா்களிடம் கூறி வந்தாராம். மேல்படிப்புக்கு வேறு கல்லூரியில் சோ்த்து விடுவதாகக் கூறி சுரேஷ் சமாதானம் செய்து வந்தாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுஜீத்ரா சனிக்கிழமை காலை வீட்டிலுள்ள அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம், பெற்றோா் கதவைத் தட்டியும் திறக்கவில்லையாம்.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சுஜீத்ரா இருந்துள்ளாா். உடனே அவரை கீழே இறக்கி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சுஜீத்ரா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.






