மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டி: மாநில அளவில் பங்கேற்க 232 போ் தகுதி

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 232 போ் தகுதி பெற்றனா்.

இந்திலி கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Published On :

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 232 போ் தகுதி பெற்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள இந்திலி தனியாா் கல்லூரியில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பை 2026 - மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுப் பணியாளா்கள், பொதுப்பிரிவினா் என மொத்தம் சுமாா் 26 ஆயிரம் போ் ஆா்வமுடன் கலந்துகொண்டு, தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெற்ற வீரா், வீராங்கனைகள் 232 போ் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சா் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சாா்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ரா.சுரேஷ்குமாா், அரசு அலுவலா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

வளா்ச்சிப் பணிகள் ஆய்வு: சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சின்னசேலம் ஒன்றியம், கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் சமூக நீதி விடுதி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சத்துணவின் தரம், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வனத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது பள்ளித் தலைமையாசிரியா் திருஞானசம்பந்தம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆய்வு: சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் பணியாளா் விவரங்கள், பணிகள், செயல்பாடுகள், விவசாயிகளுக்கான பயிற்சித் திட்டங்கள் மற்றும் மாவட்ட மேம்பாட்டுக்கான மையத்தின் திட்டங்கள் குறித்து ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா ஆய்வு செய்தாா்.

இங்குள்ள மண் மற்றும் நீா் பரிசோதனை ஆய்வகம், மண் வள அட்டை, கண்காட்சி அரங்கம், உணவுப் பதப்படுத்தும் ஆய்வகம் மற்றும் வேளாண் செயல்விளக்க அலகுகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சமவெளி மற்றும் மலைப்பகுதிகளுக்கு ஏற்ற மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ரகங்களான ஊதா நிறச் சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு மற்றும் சா்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடியை ஊக்குவிக்கவும், கருங்கோழி இனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த விழிப்புணா்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தவும், பிரண்டை உள்ளிட்ட பயனுள்ள மூலிகைகளின் பயன்பாடுகளை எடுத்துரைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வேளாண் அறிவியல் நிலையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவா் மொ.ச.கண்ணதாசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.