
பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கோப்புப்படம்
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026 - 27ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த தகுதியான மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல், புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத் திட்டத்தில் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 - 10ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000 மற்றும் 11 - 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகையாக மத்திய அரசால் வழங்கப்படும். 30 சதவீதம் மாணவிகளுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்: மாணவ, மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பினா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் அல்லது சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025 - 26ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
புதுப்பித்தல்: இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ, மாணவிகள் நடப்பாண்டில் (2026 - 27) 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு விண்ணப்பத்தை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்து, புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூா்த்தி செய்து வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணையத்தில் பூா்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சரிபாா்ப்பதற்கான கடைசி நாள் வரும் அக்.15-ஆம் தேதியாகும்.
(2026-2027) புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி இணையத்தில் அறிவிக்கப்படும்.
மேலும், இத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை அறிய மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை அறிந்துகொள்ளலாம். தகுதியான மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



