/

காவிரி விவகாரம்: புதுச்சேரியில் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:32 am IST

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 534 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் புதுவை, தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக சிவா எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.வினர் புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் தேவாலயம் அருகே புதன்கிழமை காலையில் திரண்டனர். காங்கிரஸ் கட்சியினர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமையில் உழவர்சந்தை அருகே திரண்டனர். இதேபோல விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ரயில் நிலையத்தைச் சுற்றி நாலா
புறமும் ஒன்று கூடினர். 
பின்னர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தின் உள்ளே சென்று திருப்பதியில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மீது ஏறியும், தண்டவாளத்தில் அமர்ந்தும், படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், விஜயவேணி, தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, மூர்த்தி, நீலகங்காதரன், நாரா. கலைநாதன், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் இளையராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் அ.மு.சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், மூத்த உறுப்பினர் முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவபொழிலன், செயலர் அமுதவன், திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மதிமுக நிர்வாகி சந்திரசேகர், புதிய நீதிக் கட்சி நிர்வாகி பொன்னுரங்கம், படைப்பாளி மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள், 25 பெண்கள் உள்ளிட்ட 534 பேரை போலீஸார் கைது செய்து கரிக் கிடங்கில் தங்க வைத்தனர். அவர்களை முதல்வர் நாராயணசாமியும், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.வும் நேரில் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.