இலவச அரிசிக்கு நிபந்தனை: ஆளுநர் மாளிகையில் திமுக இன்று முற்றுகைப் போராட்டம்

இலவச அரிசி வழங்க நிபந்தனை விதித்துள்ள புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்
Updated on
1 min read

இலவச அரிசி வழங்க நிபந்தனை விதித்துள்ள புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என்று புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
புதுவையில் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றது முதல் மத்திய பாஜக அரசின் முகவராக  செயல்பட்டு வருகிறார்.  அவரது செயல்பாட்டால், புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அன்றாட அரசுப் பணிகளில் கூட  ஆளுநர் கிரண் பேடி தலையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
  மாதம்தோறும் இலவச  அரிசி  வழங்கும்  திட்டத்தை   நிறைவேற்ற கடந்த  இரண்டு ஆண்டுகளாக மாநில அரசு முயன்றும் ஆளுநர் கிரண் பேடி முட்டுக்கட்டை  போட்டு வருகிறார்.
 இந்த நிலையில், சுகாதாரமான கிராமங்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்றும் மே 31-ஆம் தேதிக்குள் அதற்கான சான்றிதழை குடிமைப்பொருள் வழங்கல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சனிக்கிழமை பிற்பகல் அறிவித்தார்.  ஆனால்,  இரவோடு இரவாக தனது அறிவிப்பை திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்தாலும்,  இந்த நிபந்தனைக்கான கெடு மேலும் ஒரு மாதம் நீடிக்கப்படும் என்ற குழப்பமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். 
 இதைக் கண்டிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையை திங்கள்கிழமை (ஏப்.30) காலை 10 மணியளவில் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.  
திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.,  சட்டத்துறைச் செயலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.  ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெறும்.  போராட்டத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் , விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  படைப்பாளி மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு,  பல்வேறு சமூக அமைப்புகள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் இரா.சிவா 
எம்.எல்.ஏ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com