/

பயத்தின் காரணமாக பேரவையில் வாக்குரிமை பறிப்பு: நியமன எம்.எல்.ஏ. கருத்து

பயத்தின் காரணமாக, புதுவை சட்டப்பேரவையில் தங்களது வாக்குரிமையை ஆளும் காங்கிரஸ் அரசு பறித்துள்ளதாக நியமன எம்.எல்.ஏ. வி.சாமிநாதன் தெரிவித்தார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:25 am IST

பயத்தின் காரணமாக, புதுவை சட்டப்பேரவையில் தங்களது வாக்குரிமையை ஆளும் காங்கிரஸ் அரசு பறித்துள்ளதாக நியமன எம்.எல்.ஏ. வி.சாமிநாதன் தெரிவித்தார்.
 புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற பிறகு, நியமன எம்.எல்.ஏ.வும், பாஜக மாநிலத் தலைவருமான சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 3 நியமன எம்.எல்.ஏ.க்களிடம் முதலில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் பெறவில்லை. இதை பேரவைத் தலைவரிடம் தெரிவித்தோம். இதையடுத்து, கையொப்பம் பெற்றுக் கொண்டனர். பயத்தின் காரணமாகவே, எங்களது வாக்குரிமையைப் பறித்துள்ளனர். 1963 யூனியன் பிரதேச சட்டப்படி, குடியரசுத் தலைவர் தேர்தலை தவிர்த்து அனைத்து வாக்கெடுப்பிலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியும்.
 சட்டப்பேரவையில் திட்டமிட்டு, அவசர, அவசரமாக அரசுக் கொறடா அனந்தராமன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் யாரையும் பேசவிடாமல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது மக்கள் விரோதச் செயல்.
 நாங்கள் புதுவை மற்றும் தேசிய வளர்ச்சிக்கு பாடுபடுவோம். மேலும், மாநில, மத்திய அரசுகளுக்கு பாலமாக இருப்போம். விவாதமில்லாமல் குறுகிய காலத்தில் கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது புதுவையின் வளர்ச்சியைப் பாதிக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பேரவைத் தலைவர் மதிப்பு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.
 எங்களை பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களாக பார்க்கக் கூடாது. தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் மாநில வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். தனி நபர் வளர்ச்சியையோ, கட்சி வளர்ச்சியையோ பார்க்கக் கூடாது.
 பிரதமர் மோடி ஆலோசனையின் பேரில், எங்களை அனுமதிக்கச் செய்த பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
 இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வாக்கெடுப்பில் நாங்கள் பங்கேற்க முடியாது என்று தீர்மானத்தை கொண்டுவர முடியாது.
 எங்களுக்கு வாக்குரிமை இல்லை என்று கொண்டு வந்த தீர்மானம் தேவையற்ற விஷயம். அனந்தராமன் கொண்டு வந்த தீர்மானத்தை அனுமதித்து இருக்கக் கூடாது. பேரவைத் தலைவர், முதல்வர் ஆகியோர் மக்கள் பிரச்னையை பேசாமல், அற்ப அரசியலுக்காக பேரவையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றார் சாமிநாதன்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.