என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலை: 4 பேர் மீது வழக்கு

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் ஆர்கே தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (38), ஆட்டோ ஓட்டுநர். இவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பைக்கில் புறப்பட்டார். வீட்டிலிருந்து சில அடி தொலைவு சென்றதும், அவரது பைக்கை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
 இது குறித்து தகவல் அறிந்த முதுநிலை எஸ்.பி. அபூர்வா குப்தா சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
 முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் ஹேமச்சந்திரன், உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 நாகராஜன் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து அவரது உறவினர்கள் மற்றும் சின்னையாபுரம் மக்கள் முத்தியால்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
 கொலை தொடர்பாக போலீஸார் அல்லாகுண்டு, பிரபு நாராயணன், விக்கி, பொக்கமணி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
 போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், நாகராஜன் பல்வேறு பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.அதனால் அவருடைய ஊரில் அவருக்கு நல்ல மதிப்பு இருந்து வந்துள்ளது.
 மேலும், நாகராஜன் சில மாதங்களுக்கு முன்னர் என்ஆர் காங்கிரஸில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. 15 நாள்களுக்கு முன்னர் தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
 இந்த வளர்ச்சி எதிர் தரப்பினருக்கு பிடிக்கவில்லை. மேலும். நாகராஜனுக்கும், அல்லாகுண்டு தரப்புக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
 இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.