புத்தாண்டையொட்டி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களை பண்பலை வானொலிகளில் (எப்எம்) தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. வி.ஜெ.சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: புத்தாண்டையொட்டி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய துறைமுகம், புதிய துறைமுகம் ஹெலிபேடு, பெத்திசெமினார் பள்ளி, ரயில்வே நிலையம் எதிரே உள்ள பகுதி, பழைய சாராய ஆலை, நேரு வீதி பழைய சிறைச்சாலை, அண்ணா திடல் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் 700 போலீஸார்: புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் 700 போலீஸாரும், என்எஸ்எஸ், என்சிசி தன்னார்வலர்கள் 150 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர்கள், எஸ்.பி.க்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அனைவரும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருப்பர்.
எப்எம்கள் மூலம் தகவல்: போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி கூகுள் வரைபடத்தில் அடையாளம் காணப்பட்டு, புதுச்சேரியில் உள்ள 5 பண்பலை வானொலிகள் (எப்எம்கள்) வழியே தகவல் தெரிவிக்கப்படும். மேலும், டூப்ளக்ஸ் சிலை, காந்தி சிலை, பழைய சாராய ஆலை, ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை உள்ளிட்ட 9 முக்கிய இடங்களில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். 19 இடங்களில் கண்காணிப்பு மேடைகள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். 5 ட்ரோன் கேமரா (பறக்கும் கேமரா) மூலமும் போக்குவரத்து நெரிசல் கண்டறிந்து சரி செய்யப்படும்.
நெரிசலைக் குறைக்கும் வகையில் காந்தி சிலை, பாரடைஸ் கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, காலாப்பட்டு கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து இல்லாத பகுதிகளில் நள்ளிரவு 12 முதல் ஒரு மணி வரை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கலாம். புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டைக் கொண்டாட நேரக் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. போதை மருந்துகள், கலால் துறை அனுமதிக்காத தவறான மதுபானங்களை விற்றாலோ, பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








