தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவ, மாணவிகள் தங்களது படிப்புக்குப் பிறகு சீருடைப் பணியில் சேர வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.
புதுதில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்று பல்வேறு விருதுகள் பெற்று சாதனை படைத்த தமிழகம், புதுவை, அந்தமான் நிகோபார் தீவுகளின்
என்.சி.சி. மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா புதுவை ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது:
தேசிய மாணவர் படையின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகள் உணர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்சிசியில் சேர்ந்தால் ஒழுக்கம், நேரம் தவறாமை, தலைமை பண்பு போன்றவை வளரும்.
மாணவ, மாணவிகள் படிப்பை முடித்தவுடன் சீருடை பணியில் சேர ஆர்வம் காட்ட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொருவரும் தாய்நாட்டுக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியும். என்சிசியில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கின்றனர் என்றார்.
இந்தாண்டுக்கான குடியரசு தின என்சிசி முகாமில் நாடு முழுவதுமுள்ள 17 என்சிசி இயக்குநரகங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில், தமிழகம், புதுவை, அந்தமான், நிக்கோபார் தீவுகள் உள்ளடங்கிய என்சிசி இயக்குநரகம் சார்பில் 112 மாணவ, மாணவிகள், 13 என்சிசி பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.
இதில், 6 போட்டிகளில் முதலிடமும், 3 போட்டிகளில் 2-ஆவது இடமும், தனி நபர் பிரிவுகளில் 3 தங்கப்பதக்கமும், வெள்ளி, வெண்கலம் தலா 7 பதக்கங்களும் பெற்றனர். தேசிய அளவில் தமிழகம்,புதுவை, அந்தமான், நிக்கோபர் தீவுகளின் இயக்குநரகம் 2-ஆவது இடத்தை பிடித்தது. தனி நபர் போட்டிகளில் கப்பற்படை மற்றும் விமானப்படை பிரிவு மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.
இதேபோல, சிறந்த விமான ஓட்டிக்கான பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும், கூடாரம் அமைத்தல், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, சீருடையை புதுமையாக அணிதல் ஆகிய பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
இந்த மாணவ, மாணவிகளை ஆளுநர் கிரண் பேடி பாராட்டினார்.
விழாவில் தமிழ்நாடு என்சிசி துணை இயக்குநர் ஜெனரல் விஜேஷ்குமார் கார்க், புதுவை என்சிசி குரூப் கமாண்டர் சதீஷ் கே.குப்தா மற்றும் என்சிசி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.