காஞ்சி மடாதிபதி ஜயேந்திரர் மறைவுக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.
பல லட்சக்கணக்கான மக்களின் ஆன்மிக குருவாகவும், இந்து மதத்தின் சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்ந்த சுவாமிகளின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஆன்மிகப் பணியுடன் சமூகப் பணியையும், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளையும் செவ்வனே செய்து இந்திய மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
புதுவை அரசு காரைக்காலில் புஷ்கரணி விழா நடத்தியபோது, அதில் அவர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தது என்றும் மனதில் நீங்காத ஒன்றாகும். அவரது மறைவால் துயரில் உள்ள அனைவருக்கும் என் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
ஆர். ராதாகிருஷ்ணன் எம்.பி.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர். ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்திற்கு உரியது. அவருடைய மறைவு லட்சோப லட்ச சைவ நெறியாளர்களுக்கும், காஞ்சி மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவருடைய மறைவால் வாடும் ஆன்மிக அன்பர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.