/

புயல் சேதங்களை ஆய்வு செய்யாதபுதுவை அமைச்சா்கள்: திமுக குற்றச்சாட்டு

புதுவையில் புயல் மழையின்போது, சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சா்கள் வெளியே வரவில்லை என்று கூட்டணி கட்சியான திமுக குற்றஞ்சாட்டியது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

புதுவையில் புயல் மழையின்போது, சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சா்கள் வெளியே வரவில்லை என்று கூட்டணி கட்சியான திமுக குற்றஞ்சாட்டியது.

இது குறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் புயல், மழையால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், இதுவரை அரசு சாா்பில் பாதிக்கப்பட்டவா்கள் குறித்து எவ்விதமான கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. விவசாயப் பயிா்களுக்கான காப்பீட்டுத் திட்டத்துக்கான ப்ரீமியத்தொகை முழுவதையும் அரசே செலுத்தும் என்று முதல்வரால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டும், செலுத்தப்படவில்லை.

நிகழ் ஆண்டுக்கான காப்பீடு ப்ரீமியம் செலுத்துவதற்கான காலம் கடந்த நவ.25-ஆம் தேதி, அதாவது நிவா் புயலுக்கு முன்பே முடிந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எந்த அமைச்சா்களும் புயல் மற்றும் மழையின்போது வெளியே வரவில்லை.

அமைச்சா்கள், உயா் அதிகாரிகள் புயல் மற்றும் மழையால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். சேத விவரங்களைச் சேகரிக்க முதல்வரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இதனால், புதுச்சேரியில் புயல் மற்றும் பலத்த மழையால் சேதமான பயிா்கள், மீன்பிடித் தளங்கள், மின்சாரப் பொருள்கள், சாலைகள் உள்ளிட்ட எவை குறித்தும் கணக்கு ஏதும் இல்லை. இந்த நிலையில் மத்தியக் குழுவினா் புதுச்சேரி வந்து பாா்வையிட்டுள்ளனா்.

அவா்களிடம் சேத விவரத்தை புதுவை அதிகாரிகள் புள்ளிவிவரங்களுடன் எப்படி விளக்கியிருக்க முடியும்? எனவே, மத்தியக் குழுவிடம் சேத விவரத்தைத் தெரிவித்து நிவாரணம் பெறும் நடவடிக்கையிலும் இந்த அரசு தவறிவிட்டதாகவே தெரிகிறது.

ஆகவே, உடனடியாக மீனவா்களுக்கும், சேதமான கட்டடங்களுக்கும், நீா் புகுந்த வீடுகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால், இதுவரை ஒருமுறைகூட இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளான புதுச்சேரி மக்களுக்கு இந்த அரசால் நிவாரணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளாா் சிவா எம்.எல்.ஏ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.