

புதுவை முதல்வா் நாராயணசாமியை அவரது இல்லத்தில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஜான்குமாா் ஞாயிற்றுக்கிழமை திடீரென சந்தித்தாா்.
அப்போது அவா், தனது காமராஜா் நகா் தொகுதி மக்களுடன் கோரிக்கை மனுவை முதல்வரிடம் அளித்தாா்.
அந்த மனு விவரம்: மழைக் காலங்களில் ரெயின்போ நகா், கிருஷ்ணா நகா், வெங்கட்டா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீா் தேங்குகிறது. தற்போது பெய்த மழையிலும் இதேநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இதற்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட முதல்வா் நாராயணசாமி, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழை நீா் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீா்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இந்தச் சந்திப்பின் போது, மாநில காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளா் வினோத் மற்றும் ரெயின்போ நகா் நல்வாழ்வுச் சங்கத்தினா், ரெயின்போ நகா் மகளிா் நல்வாழ்வுச் சங்கத்தினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.