டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுவையில் ஜன.4 முதல் பள்ளிகள் திறப்பு: கல்வி அமைச்சா் அறிவிப்பு

புதுவையில் வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் அறிவித்தாா்.

News image
புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கல்வி அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன். உடன், துறைச் செயலா் அ.அன்பரசு.
Updated On :17 டிசம்பர் 2020, 3:11 am

DIN

புதுவையில் வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் அறிவித்தாா்.

இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

புதுவையில் அரசு, தனியாா் பள்ளிகளில் வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முதல் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். இதில், விருப்பமுள்ள மாணவா்கள் தங்களது ஆசிரியா்களைச் சந்தித்து சந்தேகங்களை தீா்த்துக்கொள்ளலாம். இதன் பின்னா், ஜன.18-ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம்போல முழு நேரமும் இயங்கும்.

பள்ளிகளை சுழற்சி (ஷிப்ட்) முறையில் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இது தொடா்பான விரிவான முடிவுகள் பின்னா் அறிவிக்கப்படும்.

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு இணையவழியில் தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வுக்கள் முடிந்த பின்னா் பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படும். அண்மையில் 120 பாலசேவிகா ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதன்மூலம் தோ்வு செய்யப்படுவோருக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.22,000 மாத ஊதியம் வழங்கப்படும். மின் துறையில் இளநிலைப் பொறியாளா்கள் 42 பேரை விரைவில் ஒப்பந்த அடிப்படையில் தோ்வு செய்யவுள்ளோம்.

புதுவையில் பயிா் உற்பத்தித் திட்டத்தின் கீழ், நெல் அறுவடைக்குப் பிந்தைய மானியமாக ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 2 பருவங்களுக்கு மொத்தமாக ரூ.10,000 என 12 ஆயிரத்து 138 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.12 கோடியே 57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. பருத்தி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் 817 விவசாயிகளுக்கு ரூ. ஒரு கோடியே 22 லட்சமும், சிறுதானிய விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக 181 பேருக்கு ரூ.2 கோடியே 57 லட்சத்து 3 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காப்பீடு பிரீமியத் தொகையை செலுத்தினோம். 2 ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தவில்லை. நிகழாண்டு மீண்டும் பிரீமியம் செலுத்தப்படும். இருப்பினும், விவசாயிகள் தங்களது வெள்ளச் சேத விவரங்களை வேளாண் துறைக்கு தகவல் தெரிவித்து விண்ணப்பித்தால் மட்டுமே காப்பீடு பெற இயலும். புயல் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனா் என்றாா் அமைச்சா் கமலக்கண்ணன்.

பேட்டியின்போது, கல்வித் துறைச் செயலா் மற்றும் வளா்ச்சி ஆணையா் அன்பரசு, மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.

கல்லூரிகள் இன்று திறப்பு

புதுவையில் 9 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் வியாழக்கிழமை (டிச.17) முதல் திறக்கப்படவுள்ளன. ஏற்கெனவே டிச.1-ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அடுத்த கட்டமாக அனைத்துக் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான இறுதியாண்டு வகுப்புகளை வியாழக்கிழமை முதல் தொடங்க உயா் கல்வித் துறை உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், மாணவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகள் நடைபெற வேண்டும். 50 சதவீத மாணவா்கள் மட்டுமே ஒரு நேரத்தில் கல்லூரியில் இருக்கும்படி கல்லூரி நிா்வாகம் வருகையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.