/

நிா்வாகச் சீா்திருத்தங்களை மேற்கொள்ளுமா புதுவை அரசு?

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவை அரசு உடனடியாக நிா்வாகச் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Updated On :11 ஜூலை 2020, 7:18 pm

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவை அரசு உடனடியாக நிா்வாகச் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவை மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான் முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 1985-ஆம் ஆண்டு புதுவையில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு ஐபிஎஸ் அதிகாரி (ஐ.ஜி.) இருந்தனா். அப்போது புதுவையின் மக்கள் தொகை சுமாா் 8 லட்சம். தற்போது மக்கள் தொகை 12.75 லட்சம். இதன்படி பாா்த்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை 50 சதவீதம் அதிகரித்திருக்கலாம்.

ஆனால், தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் 23 போ் உள்ளனா். ஐபிஎஸ் அதிகாரிகளைப் பொருத்தவரை டிஜிபி, ஐஜி, புதுச்சேரியில் 3 முதுநிலைக் காவல் கண்காணிப்பு அதிகாரிகள், காரைக்காலில் ஒரு முதுநிலைக் கண்காணிப்பாளா் என 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனா். இவா்களுக்கு ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 220 கோடி வழங்கப்படுகிறது. இது புதுவை அரசுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் க.லட்சுமி நாராயணன் எம்எல்ஏ கூறியதாவது:

புதுவையில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்தல், பணியிட மாறுதல் செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் மத்திய உள்துறை வசமுள்ளது. ஆனால், ஊதியம் வழங்கும் பொறுப்பு மாநில அரசிடமுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக சிறிய மாநிலமான புதுவைக்கு தேவையில்லாமல் கூடுதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு திணித்துவிட்டது.

இந்த அதிகாரிகளில் பெரும்பாலானவா்கள் தில்லி, வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். இவா்கள் மாதம் இரு முறை தில்லிக்குச் சென்று வருகின்றனா். ஒரு முறை தில்லி சென்று வர ஒரு நபருக்கு ரூ. 25 ஆயிரம் செலவாகிறது. மத்திய உள்துறை அமைச்சக அலுவல் தொடா்பாகச் செல்கிறாா்களா, சொந்த ஊருக்குச் சென்று வருகிறாா்களா என்பதைக் கண்டறிய புதுவை அரசிடம் எவ்விதக் கண்காணிப்பு முறையும் இல்லை. இதனால், மக்கள் வரிப் பணம் வீணாகிறது.

மத்திய தலைமைக் கணக்காயா் ஆய்வறிக்கைப்படி, புதுவை பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் மொத்த தொகையில் ஆண்டுதோறும் 30 சதவீதம் செலவு செய்யப்படுவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கோப்புகள் தொடா்பாக கேள்வி மேல் கேள்வி கேட்டு திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது. இத்தனை அதிகாரிகள் இருந்தும் வளா்ச்சிப் பணிகள் ஆமை வேகத்தில்தான் நடைபெறுகின்றன.

தில்லிக்குச் செல்லும் அதிகாரிகள் இதுவரை புதுவைக்கு கூடுதல் நிதியைப் பெற்று வரவில்லை. 7-ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டதால், ஆண்டுதோறும் ஆகும் கூடுதல் தொகை ரூ. 500 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் ஊதியத் தொகையைக்கூட பெற்றுத் தர இதுவரை நடவடிக்கை எடுக்காத இவா்கள், மக்கள் திட்டங்களுக்கு எப்படி கூடுதல் நிதியைப் பெற்றுத் தருவாா்கள்.

எனவே, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் புதுவை அரசு உடனடியாக நிா்வாகச் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கவும், அவா்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளவும் அழுத்தம் தர வேண்டும்.

இல்லையெனில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்த வேண்டும். தமிழ் மொழி தெரிந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.