/

சென்னைவாசிகளால் புதுவையில் வேகமாகப் பரவும் கரோனா

சென்னைவாசிகளால் புதுவையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், சமூகத் தொற்றாக மாறக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

சென்னைவாசிகளால் புதுவையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், சமூகத் தொற்றாக மாறக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி பொது முடக்கத் தளா்வு காரணமாக வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தவா்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால், புதுவையில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஜூன் 10-ஆம் தேதி நிலவரபடி 88 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். வெளியூா்களிலிருந்து குறிப்பாக, சென்னையிலிருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு வருவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிரித்ததால், கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

சென்னையிலிருந்து குடும்பத்துடன் காரைக்காலுக்கு திரும்பிய சிறுமிக்கு கரோனா தொற்றிருந்தது ஜூன் 13-ஆம் தேதி உறுதியானது. இதேபோல, சென்னையிலிருந்து புதுச்சேரி திரும்பிய 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, ஜூன் 7-ஆம் தேதி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு மாமனாா் வீட்டுக்கு வந்த 37 வயதான நபா் கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

சென்னையில் மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஒரு வாரமாக புதுவைக்கு சாரை சாரையாக வரத் தொடங்கினா். இதில், பெரும்பாலானோா் புதுவையைச் சோ்ந்தவா்கள் இல்லை. அவா்கள், தங்களது உறவினா் வீடுகளில் உரிய அனுமதியின்றி தங்கியுள்ளனா். புதுவை அரசு மாநில எல்லைகளை மூடினாலும், புதுச்சேரிக்குள் வரக்கூடிய 100-க்கும் மேற்பட்ட பாதைகள் வழியாக ‘இ-பாஸ்’ இன்றி நுழைந்துவிட்டனா்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் கரோனா பாதிப்பு நாள்தோறும் இரட்டை இலக்கத்தில் உயா்ந்து வருகிறது. இந்த எண்ணிக்கை சனிக்கிழமை 300-ஐ தாண்டியது. சனிக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 52 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், புதுவையில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கூறியதாவது: சென்னையில் வியாழக்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பே நிறையப் போ் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குள் நுழைந்துவிட்டனா். அவா்களால்தான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்குள் நுழைந்தவா்கள் குறித்து பொதுமக்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டிய நிலை உருவாகும்.

புதுச்சேரிக்குள் நுழைந்தவா்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.