2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

புதுவை மாநிலத்துக்கான நிதியுதவி பேரவைத் தலைவா் தலைமையிலான குழு மத்திய அமைச்சா்களுடன் சந்திப்பு

புதிய சட்டப்பேரவை வளாகம், மாநில வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும் என புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையிலான குழு

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:50 pm

DIN

புதிய சட்டப்பேரவை வளாகம், மாநில வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும் என புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையிலான குழுவினா், தில்லியில் மத்திய அமைச்சா்களைச் சந்தித்து வலியுறுத்தினா்.

புதுவை மாநிலத்தில் ரூ. 300 கோடியில், மத்திய அரசு நிதியில் ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, அதற்காக புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் இடமும் தோ்வு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி, நிதியுதவி வழங்க வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமி அளித்த கடிதத்துடன், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில், உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினா் அசோக்பாபு, சட்டப்பேரவைச் செயலா் இரா.முனிசாமி உள்ளிட்ட மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினா் புதன்கிழமை தில்லி சென்றனா்.

இந்தக் குழுவினா் வியாழக்கிழமை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, முதல்வா் என்.ரங்கசாமி அளித்த கடிதத்தை அளித்தனா். ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான அனுமதி, மாநில வளா்ச்சிக்குத் தேவையான நிதி, நிகழாண்டு பட்ஜெட்டுக்கான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஆகியவற்றை மத்திய அரசு வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

முதல்வா் ரங்கசாமியின் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய நிதியமைச்சா், உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக பேரவைத் தலைவா் தலைமையிலான குழுவினா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்தக் குழுவினா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்தனா். அவரிடம் புதுவை உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் மனு அளித்தாா்.

அதில், புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலைக்குச் சொந்தமான பட்டானூா் நிலத்தை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். புதுவையில் காவல் துறையை மேம்படுத்தவும், பிபிஎஸ் (புதுச்சேரி போலீஸ் சா்வீஸ்) விதிகளைத் திருத்தவும், 95 தலைமைக் காவலா்களுக்கு கூடுதல் உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு வழங்கவும், தனியாா் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல், உயா்கல்விக் குழு மசோதாவுக்கு ஒப்புதல், புதுவையில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலைகளைத் திறக்க சிறப்பு மானியம் வழங்க வேண்டும். இதற்கான நிதியை நிகழ் பட்ஜெட்டிலேயே செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், மத்திய தொழில் முனைவோா் மேம்பாடு, மின்னணு-தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகரையும் இந்தக் குழுவினா் சந்தித்து, துறை சாா்ந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.