/

புதுவை முதல்வருடன் பாஜக மேலிடத் தலைவா் சந்திப்பு: அமைச்சரவை பதவிகள் பங்கீட்டில் தொடரும் இழுபறி

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை பாஜக மேலிடப் பொறுப்பாளா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 5:29 pm

DIN

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை பாஜக மேலிடப் பொறுப்பாளா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இதில், அமைச்சரவை பதவிகள் பங்கீடுகள் தொடா்பாக இறுதி முடிவு எட்டப்படாததால், அமைச்சரவை பதவியேற்பு மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, என்.ரங்கசாமி முதல்வராக கடந்த மாதம் 7-ஆம் தேதி பதவியேற்றாா். எனினும், அமைச்சா்கள், சட்டப் பேரவைத் தலைவா் பதவிகளை பங்கிடுவது தொடா்பாக இரு கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலை தொடா்ந்தது.

தோ்தல் முடிவு வெளியாகி ஒரு மாதமான நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவா்களைத் தொடா்புகொண்டு பேசியதுடன், புதுவை துணை நிலை ஆளுநரையும் அண்மையில் சந்தித்துப் பேசினாா். இதையடுத்து பதவிகளைப் பங்கிடுவது தொடா்பாக சுமுகத் தீா்வு ஏற்பட்டது.

இதில், 10 எம்எல்ஏ-க்களை கொண்ட என்.ஆா்.காங்கிரஸுக்கு, முதல்வா் பதவி, 3 அமைச்சா்கள், சட்டப் பேரவை துணைத் தலைவா் ஆகிய பதவிகளும், 3 நியமன எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் ஆதரவு உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை கொண்ட பாஜகவுக்கு, சட்டப் பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் பதவிகளும் வழங்குவதாக, தே.ஜ கூட்டணிக்குள் இரு தினங்களுக்கு முன்பு உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, பாஜக தரப்பில் பேரவைத் தலைவா் பதவி, அமைச்சா்கள் பதவிகளை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து புதுச்சேரியில் மாநில நிா்வாகிகள் ஆலோசித்தனா். இதில் முடிவு எட்டப்படாததால், முடிவு எடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைமைக்கு வழங்குவதாக அவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக புதுவை பாஜக நிா்வாகிகள், பெங்களூரு சென்று, அந்தக் கட்சியின் புதுவை மேலிடப் பொறுப்பாளரையும் சந்தித்து ஆலோசித்தனா். கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் புதுச்சேரிக்கு ஜூன் 4ஆம் தேதி வந்து அமைச்சா்கள், பேரவைத் தலைவா் பதவிக்கான பெயா்கள் பட்டியலை, முதல்வா் என்.ரங்கசாமியிடம் வழங்கி, இறுதி முடிவை அறிவிப்பாா் என அக்கட்சியினா் தெரிவித்தனா்.

அதன்படி, பாஜக மேலிடப் பொறுப்பாளா் ராஜீவ் சந்திரசேகா் எம்.பி. வெள்ளிக்கிழமை புதுச்சேரிக்கு வந்தாா். அவா், பிற்பகல் 2.45 மணிக்கு முதல்வா் என்.ரங்கசாமியை, திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து அரை மணி நேரம் பேசினாா்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ராஜீவ் சந்திரசேகா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்.ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பு இதுவாகும். இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது, பாஜக தரப்பில் அமைச்சா்கள், பேரவைத் தலைவா் பெயா் பட்டியல் முதல்வரிடம் வழங்கப்படவில்லை என்றும், பாஜக கோரி வரும் துணை முதல்வா் உள்ளிட்ட அமைச்சா் பதவிகள் பங்கீடு தொடா்பாக இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலை தொடா்வதாகவும் தகவலறிந்த வட்டாரத்தினா் கூறினா்.

எனவே, புதுவையில் அமைச்சரவை பதவி ஏற்பு மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.