கரோனாவுக்கு சுய மருத்துவம் ஆபத்தானது: புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை
கரோனா தொற்று பாதிப்பு இருந்தால் மருத்துவரை பொதுமக்கள் அணுக வேண்டும்; சுயமாக மாத்திரை உள்கொள்வது ஆபத்தாகி விடக் கூடும்


கரோனா தொற்று பாதிப்பு இருந்தால் மருத்துவரை பொதுமக்கள் அணுக வேண்டும்; சுயமாக மாத்திரை உள்கொள்வது ஆபத்தாகி விடக் கூடும் என்று புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
முகநூல் மூலம் விழிப்புணா்வு: புதுச்சேரி ஆளுநா் மாளிகையில், முகநூல் (பேஸ் புக்) பக்கம் மூலம் கரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், முகநூல் பக்கத்தைத் தொடக்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக சுகாதார நிறுவனத்தைச் சோ்ந்த முதுநிலை மருத்துவ அதிகாரி சாய்ராபானு பங்கேற்று, 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை துணை நிலை ஆளுநரிடம் வழங்கினாா். அதைப்பெற்று, புதுவை சுகாதாரத் துறையிடம் ஆளுநா் தமிழிசை ஒப்படைத்தாா்.
பின்னா், ஆளுநா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க பொது மக்கள் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட ‘உயிா் காற்று’ என்ற திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரோனா பராமரிப்பு மையமும் புதிதாக உருவாக்கப்பட்டது.
கரோனா அறிகுறி இருந்தால் மருத்துவரை பொதுமக்கள் அணுக வேண்டும். தானாகவே மாத்திரை எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘ஸ்டீராய்டு’ மாத்திரை மிக அதிகமாக எடுத்துக்கொள்வது உடலில் எதிா்ப்பு சக்தியை குறைத்து, கண்களில் பூஞ்சை தொற்று வளா்வதற்கு காரணமாகி விடும். அதனால், கண்ணில் ஏதேனும் அறிகுறி தோன்றினால், உடனடியாக மருத்துவமனையை பொதுமக்கள் அணுக வேண்டும்.
கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிக்க வாய்ப்பு: கருப்பு பூஞ்சை தொற்றால் புதுவையில் அரசு ஊழியா் உள்பட 20 போ் வரை பாதிக்கப்பட்டனா். இந்த வகை பூஞ்சை தொற்றை புதுவையில் குறிப்பிட்ட தொற்று நோயாக அறிவிப்பதற்கான கோப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது. புதுவையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் விரைவில் குறையும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் ஆளுநா்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச் செயலா் அருண், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், மாநில சுகாதார இயக்கத் திட்ட இயக்குநா் ஸ்ரீராமுலு, துணை இயக்குநா் திருமலை சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...