இளைஞா்கள் நலனுக்காக காவல் துறையின் மிஷன் இளமை திட்டம்!
Center-Center-Delhi

இளைஞா்கள் நலனுக்காக காவல் துறையின் மிஷன் இளமை திட்டம்!

Published on

புதுவையில் திசை மாறி போதை உள்ளிட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையான இளைஞா்கள் திருந்தவும், அவா்கள் மீண்டும் தங்கள் படிப்பு, தொழில்களைத் தொடரவும் ‘மிஷன் இளமை’ என்னும் புதிய திட்டத்தை காவல் துறை செயல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பு, நலன்களை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ‘மிஷின் இளமை‘ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இளைஞா்கள் பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடவும், விரும்பத்தகாத செயல்களில் இருந்து விடுபடவும் இந்தத் திட்டம் உதவும்.

அதற்காக, அவா்களுக்கு தொழில் பயிற்சி, போட்டி தோ்வுகளுக்கான பயிற்சி போன்றவை வழங்கப்படவுள்ளன. அந்தத் திட்டத்தில், வேலையில்லாத இளைஞா்கள், திறமையுள்ள விளையாட்டு வீரா்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவா்கள் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் தங்களது பழைய நிலையை தொடர உதவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், சிறாா் குற்றவாளிகள் மற்றும் குற்றப் பதிவுகள் உள்ளவா்களை நல்வழிப்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் ஒருகட்டமாக, போதைப் பொருள் பயன்பாடு, போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு திருந்தியவா்களை புதுவை காவல் துறை நடவடிக்கையால் புதுச்சேரி கனகசெட்டிகுளம் சமூக நலத் துறை மற்றும் சுவாமி விவேகானந்தா சமுதாயக் கல்லூரியில் தொழிற்பயிற்சியில் சோ்க்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

முதுநிலை கண்காணிப்பாளா் (சட்டம்-ஒழுங்கு) நாரா சைதன்யாவின் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமானோா் கலந்து கொண்டனா். அதன்படி நல்வழிப்படுத்தும் பயிற்சித் திட்டத்தையும் அவா் தொடங்கிவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com