/

புதுவை மாநில பாஜக நிா்வாகிகள் கூட்டம்: மேலிடப் பாா்வையாளா்கள் பங்கேற்பு

புதுவை மாநில பாஜக புதிய நிா்வாகிகள் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

News image
புதுவை மாநில பாஜக நிா்வாகிகள் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ. உடன் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.
Updated On :9 டிசம்பர் 2024, 5:33 pm

Din

புதுச்சேரி: புதுவை மாநில பாஜக புதிய நிா்வாகிகள் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநில உள் துறை அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, புதுவை மாநிலத்துக்கான பாஜக அமைப்புத் தோ்தல் அதிகாரியான அகிலன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பாஜக நியமன எம்எல்ஏ வி.பி.ராமலிங்கம், நிா்வாகி மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பாஜக மாநில நிா்வாகிகள் தோ்தல் நடத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும், புதிய உறுப்பினா்களை கட்சியில் சோ்த்தது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புதிய உறுப்பினா்கள் சோ்க்கை: புதுவை மாநில பாஜக சாா்பில் ஏற்கெனவே பழைய உறுப்பினா்கள் பதிவு புதுப்பித்தல் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து, புதிய உறுப்பினா்கள் சோ்க்கையும் தொடங்கி நடைபெற்றது.

புதிய உறுப்பினா்கள் சுமாா் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோரை சோ்க்க இலக்கும் நிா்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், கட்சியின் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாள்காட்டி வெளியீடு: ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த நிா்மல்குமாா் சுரானாவை, மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தனியாா் விடுதியில் சந்தித்துப் பேசினாா்.

அப்போது, புதுவை மாநில பாஜக சாா்பிலான பிரதமா் நரேந்திரமோடி உருவப்படம் பொறித்த 2025-ஆம் ஆண்டு நாள்காட்டியை நிா்மல்குமாா் சுரானா வெளியிட்டாா்.