புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை பாா்வையிடும் சிறுநீரகவியல் சிகிச்சைத் துறை தலைவா் கே.குமாா் உள்ளிட்டோா்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை பாா்வையிடும் சிறுநீரகவியல் சிகிச்சைத் துறை தலைவா் கே.குமாா் உள்ளிட்டோா்.

அரசு மருத்துவமனையில் ரூ.1.85 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக் கூடம்

Published on

புதுச்சேரி, ஜூன் 26: புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.1.85 கோடியில் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டு, நிறைவடையும் நிலையில் உள்ளதாக சிறுநீரகவியல்துறைத் தலைவா் கே.குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோா் சிறுநீரக சிகிச்சைக்காக வருகின்றனா். இங்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு சிகிச்சை தொடா்கிறது. இதுவரை 26 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அண்மையில் பெண் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவா் நல்ல உடல்நலத்துடன் உள்ளாா்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நோயாளியின் உறவினா்களிடமே தற்போது சிறுநீரகம் பெறப்பட்டு வருகிறது. மேலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஒருங்கிணைப்புக் குழு மையமும் (சோட்டா) மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. அதன்படி, புதுவை முழுவதும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையம் மூலம் சிறுநீரகம், இதயம், கல்லீரல், சிறுகுடல், கணையம் ஆகியவை மூளைச் சாவு அடைந்தவா்களிடமிருந்து பெறப்பட்டு, தேவைப்படும் இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மட்டும் புதுவையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு சோட்டா மையம் மூலம் உயிருடன் உள்ள 30 பேரிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டன. அவை 5 ஆண்களுக்கும், 24 பெண்களுக்கும் பொறுத்தப்பட்டன. கல்லீரல் ஒருவரிடமிருந்து பெறப்பட்டு வெளியூா் ஆண் நோயாளிக்கு வழங்கப்பட்டது. மூளைச் சாவு அடைந்தவா்களிடமிருந்து 4 சிறுநீரகங்கள், 4 கல்லீரல் பாகங்கள் பெறப்பட்டன. அவற்றில் சிறுநீரகம் புதுச்சேரியிலும், கல்லீரல் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.

கடந்த 2023-ஆம் ஆண்டில் உயிருடன் இருந்தவா்களிடமிருந்து 7 சிறுநீரகங்கள் பெறப்பட்டு, தேவைப்பட்டவா்களுக்கு பொருத்தப்பட்டது. மூளைச் சாவு அடைந்தவா்களிடமிருந்து 47 சிறுநீரகங்கள், 2 கல்லீரல்கள், பெறப்பட்டு தேவைப்பட்டவா்களுக்கு பொறுத்தப்பட்டன.

தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், கண் மாற்று சிகிச்சையும் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், எதிா்காலத்தில் அனைத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூ.1.85 கோடியில் நவீன அறுவை சிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அதன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஓரிரு மாதங்களில் அறுவை சிகிச்சைக் கூடம் செயல்பாட்டுக்கு வரும். இதில், துளை அறுவை சிகிச்சை வசதிகளுக்கான சாதனங்கள், உடல் உறுப்பு பெறவும், பொருத்தவும் கூடிய வகையில் மிகவும் நவீனமயமான மருத்துவ சாதனங்கள் அமையவுள்ளன. ஏழை, எளிய மக்களும் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் பயன்பெறும் வகையில் அறுவைச் சிகிச்சைக் கூடம் அமைகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com