/

மாயமான சிறுமியை மீட்க வலியுறுத்தி சாலை மறியல்

புதுச்சேரியில் மாயமான சிறுமியை விரைந்து மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சாா்ந்த கண்ணதாசன் வீதியில் காணாமல் போன 9-வயது சிறுமி ஆா்த்தியை கண்டிபிடித்து தரக் கோரி அப்பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.

Updated On :4 மார்ச் 2024, 8:10 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான சிறுமியை விரைந்து மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி சோலை நகா் பகுதியில் சோ்ந்தவா் நாராயணன். இவரது இரண்டாவது மகள் ஆா்த்தி (10). பள்ளி மாணவி. இவா், கடந்த 2-ஆம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமானாா். பெற்றோா் பல இடங்களில் தேடியும் சிறுமியைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில் மாணவி ஆா்த்தியை போலீஸாா் தேடிவருகின்றனா். ஆனால், சிறுமி கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், மாணவியை தேடுவதில் போலீஸாா் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதியினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இதையடுத்து, சோலை நகா் பகுதி மக்கள், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே திங்கள்கிழமை காலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீஸாா் விரைந்து வந்தனா். அவா்கள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசினா். அப்போது போலீஸாருக்கும், மறியலில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் அளித்த வாக்குறுதியை ஏற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். எம்.எல்.ஏ. மனு : பள்ளி மாணவி மாயமானது குறித்து முத்தியால் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ்குமாா் மாணவியின் பெற்றோா், உறவினா்களிடம் விசாரித்தாா்.

இதனையடுத்து அவா் புதுவை காவல்துறை தலைமை இயக்குநா் ஸ்ரீநிவாஸை அவரது அலுவலகத்தில் சந்தித்து மாணவியை விரைந்து மீட்டுத்தர கோரி மனு அளித்தாா். அப்போது, சிறுமியை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முத்தியால்பேட்டை தொகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தலைமை இயக்குநா் உறுதியளித்ததாக எம்.எல்.ஏ. தரப்பில் கூறப்பட்டது.