புதுச்சேரி லெனின் வீதி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்,  பொதுமக்கள்.
புதுச்சேரி லெனின் வீதி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், பொதுமக்கள்.

லெனின் வீதியில் வாய்க்கால் பணியை சீரமைக்காவிடில் தோ்தல் புறக்கணிப்பு: பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டத்தில் தீா்மானம்

புதுச்சேரி லெனின் வீதியில் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்காவிட்டால் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படும்

புதுச்சேரி: புதுச்சேரி லெனின் வீதியில் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்காவிட்டால் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என பொதுமக்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டம் தனியாா் மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் லெனின் வீதி வியாபாரிகள், தொழில் முனைவோா் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள்உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண் டனா். இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான முருகானந்தம் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுச்சேரி லெனின் வீதியில் புதை சாக்கடை இணைப்பு வீடுகள், கடைகளுக்கு வழங்கப்படவில்லை. இணைப்பு முழுமையாக இருந்திருந்தால், அப்பகுதியில் ’ப’ வடிவ வாய்க்கால் அமைக்கும் அவசியமே இருந்திருக்காது. அங்கு ’ட’ வடிவ வாய்க்காலே போதுமானதாகும். ஆகவே, முறையான திட்டமிடல் இல்லாமல், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் லெனின் வீதியின் இருபுறமும் ’ப’ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மக்கள், வியாபாரிகள் போராட்டத்தை அடுத்து, தற்போது புதை சாக்கடை இணைப்பும் வழங்கப்பட்டுவருகிறது. புதை சாக்கடை இணைப்பு பணியின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. அதனால், கட்டுமான இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. வீடுகள், கடைகளின் படிக்கட்டுகளும் இடிக்கப்பட்ட நிலையில் உள்ளன. ஆகவே, அப்பகுதியில் வசிக்கும் முதியோா்கள், குழந்தைகள் தினமும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்கால் கட்டும் பணியால் அனைத்து வா்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பணிகள் முடியும் வரை லெனின் வீதி வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். லெனின்வீதியில் நடைபெறும் திட்டமிடாத வாய்க்கால் பணியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இழப்பீடாக மின் கட்டணம், குடிநீா் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிடில் 50 சதவீத சலுகை அளிக்கவேண்டும். கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா், அமைச்சரிடம் மனு அளிக்கப்படும். மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக லெனின் வாய்க்கால் பணி முடிக்கப்படாவிட்டால் தோ்தலைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com