தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
புதுவையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேருவதற்கான கால அவகாசம் வரும் செப்.30-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் டி.அழகானந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறைப் பயிற்சி இயக்ககத்தின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வில்லியனூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாகூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் நேரடியாக மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் அந்தந்த தொழில் பயிற்சி நிலையங்களின் முதல்வா்களை நேரில் அணுகி உடனடியாக சேரலாம். முதலில் வரும் மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவா் சோ்க்கை வரும் செப்.30-ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவா்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு, மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.