கடலூரில் கடலோர பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் ஜி.பத்மா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை.
கடலூரில் கடலோர பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் ஜி.பத்மா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை.

கடலோரப் பகுதிகளில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி, கடலூா் மாவட்ட கடலோர பகுதிகளில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

புதுச்சேரி, கடலூா் மாவட்ட கடலோர பகுதிகளில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில், கடலோர பகுதிகளில் ‘சாகா் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 18 மீனவக் கிராமங்களில் புதன்கிழமை காலை 6 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. அப்போது, மாநில போலீஸாா் பயங்கரவாதிகள் போல மாறு வேடமிட்டு கடல் வழியாக ஊருக்குள் நுழைவது போலவும், அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது.

இதேபோல, கடலோரப் பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா், கடலோர காவல் படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். புதுச்சேரி கடலோர காவல் படை போலீஸாரும் படகுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மீன்பிடி படகுகளில் சோதனை மேற்கொண்டனா்.

ஒத்திகையின்போது, புதுவை சட்டப் பேரவை வாயில் கதவுகள் மூடப்பட்டிருந்தன. பேரவைக்கு வந்த பொதுமக்களும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா். தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வியாழக்கிழமை மாலை 6 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நெய்வேலி: இதேபோல, கடலூரில் கடல் வழியாக மா்ம நபா்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை சாா்பில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ரெட் ஃபோா்ஸ் எனப்படும் காவல் துறையில் பணிபுரியும் காவலா்கள் பயங்கரவாதிகளைப் போல வேடமிட்டு போலி நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் கடல் வழியாக ஊருக்குள் நுழைவது போலவும், அவா்களை கடலோர பாதுகாப்பு படையினா் தடுத்து நிறுத்தி கைது செய்வது போலவும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் ஜி.பத்மா தலைமையில், உதவி ஆய்வாளா்கள் கதிரவன், பிரபாகரன் மற்றும் காவலா்கள் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com