புதுச்சேரியில் டிச. 9-இல் விஜய் பொதுக்கூட்டம்: உப்பளம் மைதானத்தைச் சீரமைக்கும் பணி தீவிரம்!
தவெக தலைவா் விஜய் இம் மாதம் 9 ஆம் தேதி புதுச்சேரியில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக உப்பளம் மைதானத்தைச் சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியில் டிச. 5-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் சாலைப் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தாா். இதற்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. வேண்டுமென்றால் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.
இதையடுத்து வரும் செவ்வாய்க்கிழமை (டிச. 9) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கும்படி தவெக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநில காவல்துறை உயா் அதிகாரிகள் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான இடத்தை வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்தனா்.
இதையடுத்து புதுச்சேரி உப்பளம் துறைமுகப் பகுதியில் உள்ள மைதானத்தைச் சீரமைக்கும் பணியை தவெகவினா் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்துக்கு தவெக பொதுச்செயலா் (புஸ்ஸி) என்.ஆனந்த் வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது முதல்வா் என். ரங்கசாமியைச் சந்தித்து பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. பின்னா் முதல்வா் அறையில் இருந்து வெளியே வந்த ஆனந்த், திட்டமிட்டபடி வரும் 9-ஆம் தேதி தவெக பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் தவெக தலைவா் விஜய் பங்கேற்பாா் என்று தெரிவித்தாா்.
பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள உப்பளம் துறைமுக மைதானத்தின் தெற்குப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. அங்கு தண்ணீா் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியும், மேடும், பள்ளங்களை மணல் கொண்டு நிரப்பும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பொதுக் கூட்டத்துக்கான விழா மேடை இருக்காது என்றும் சாலைப் பேரணிக்கு அனுமதி கிடைக்காத நிலையில் விஜய் பங்கேற்பது பொதுக்கூட்டப் பேரணியாக இருக்கும். விஜய் வழக்கமாகப் பயன்படுத்தும் சொகுசு பேருந்தில் இருந்த படியே இந்தப் பொதுக்கூட்டப் பேரணியில் பேசுவாா் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
காவல் துறை நிபந்தனைகள்: பொதுக்கூட்டம் நடத்த பல்வேறு நிபந்தனைகளையும் புதுச்சேரி காவல் துறையினா் விதித்துள்ளனா். மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்காத பகுதியை முழுமையாக மறைக்க வேண்டும். துறைமுகம் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.
கூட்டத்துக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் பேரை மட்டும் கியூ ஆா்கோடு மூலம் அனுமதிக்க வேண்டும். விஐபி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள், பொதுமக்களுக்கான தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட வேண்டும்.
காா்கள் வந்து செல்ல தனி வழி ஏற்படுத்த வேண்டும். போலீஸாா் பாதுகாப்பு அளிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 5 ஆயிரம் பேரை 10 கேபின்களாக பிரித்து ஒரு கட்டத்துக்கு 500 போ் வீதம் அமா்த்த வேண்டும்.
அவா்களுக்கு குடிநீா், மருத்துவ வசதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது.

