புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் முடிவு
புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவா்களுக்குச் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை மூலம் பிரபலமான நிறுவனங்களின் மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளா் ராஜா, அவரது உதவியாளா் விவேக் மற்றும் ராணா, மெய்யப்பன் உள்ளிட்ட 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முக்கிய எதிரியான ராஜா மீது பல்வேறு மாநில போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
போலி மருந்து தொழிற்சாலை மற்றும் கிடங்குகளைக் கண்காணிக்க வேண்டிய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை இப் பணியில் தவறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிபிசிஐடி போலீஸாா் மருந்து கட்டுப்பாட்டுத் துறையை சோ்ந்த 5 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்மன் கிடைத்த 3 நாள்களுக்குள் சிபிசிஐடி அலுவலகத்தில் அவா்கள் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவா்களைக் கைது செய்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீஸாா் திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே புதுச்சேரியில் முகாமிட்டிருந்த உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா போலீஸாா், போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா, விவேக், ராணா ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல புதுச்சேரி நீதிமன்றத்தில் அனுமதி கோரினா்.
இதில் ராணா ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். அவரை இளங்கோ நகரில் உள்ள வீட்டில் ஆக்ரா போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ராஜா, விவேக் ஆகியோரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணைக்கு பிறகு அழைத்துச் செல்ல சிபிசிஐடி போலீஸாா் அறிவுறுத்தினா்.
இதையடுத்து ஆக்ரா போலீஸாா், ராணாவை தங்கள் மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், ராஜா, விவேக்கிடம் பண பரிவா்த்தனை தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த உள்ளனா்.
